செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!!
செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன. இந்த போட்டிக்கான வரலாற்று சிறப்புமிக்க ஜோதி ஓட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார். டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆர்கடி டிவோர்கோவிச் பிரதமர் மோடியிடம், செஸ் ஒலிம்பியாட் சுடரை ஒப்படைத்தார். இதை அடுத்து அந்த ஜோதியை பிரதமரிடம் இருந்து கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் மைதானத்தில் அந்த ஜோதியை ஏந்தியவாறு வலம் வந்தார்.
இந்த ஜோதி 40 நாட்களுக்குள் 75 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பின்னர் ஜூலை 28ம் தேதி அன்று தமிழகத்தை அடையும் இந்த ஜோதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் போட்டி தொடங்குகிறது. இந்த ஜோதி ஓட்டம் இனிவரும் செஸ் ஒலிம்பியாட் தொடர்களில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
https://www.maalaimalar.com/news/national/tamil-news-saritha-claims-swapna-is-bluffing-she-told-me-in-prison-that-cm-was-not-involved-474834?infinitescroll=1