543 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு!!
உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாடு கடற்பிரதேசத்தில் இருந்து 543 கிலோ கிராம் கேரளக் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாவின் மொத்த பெறுமதி 120 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் தம்பபண்ணி கடற்படையினர் நேற்று வழமை போல உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னப்பாடு – பெரியபாடு கடற்பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, கடலில் சில பொதி செய்யப்பட்ட சில மூடைகள் மிதந்துபொண்டு வருவதனை அவதானித்த கடற்படையினர் அதனை கைப்பற்றி பார்வையிட்டுள்ளனர்.
இதன்போதே, கேரளக் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடலில் மிதந்து வந்த அனைத்து பொதிகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
173 மூடைகளில் ஒரு கிலோ வீதம் அடைக்கப்பட்டிருந்த 543 கிலோ கிராம் (ஈரமான எடை) கேரளக் கஞ்சா பொதிகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட குறித்த கேரளா கஞ்சாவை கடல்மார்க்கமாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்த சந்தேக நபர்கள், அதனை கரைக்கு கொண்டு வர முடியாமல் கடலிலேயே வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என தாம் நம்புவதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்படி பேரளக் கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டமையை அடுத்து, சின்னப்பாடு – பெரியபாடு பகுதியில் கடற்படையினர் மேலதிக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.