;
Athirady Tamil News

தம்மிக அதிரடி: சத்தியப்பிரமாணம் செய்யமாட்டேன் என உறுதி!!

0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள தம்மிக பெரேரா, தனது தீர்மானத்தை உயர்நீதிமன்றத்துக்கு இன்று (20) அறிவித்தார்.

தனது எம்.பி நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் வரை பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ சத்தியப்பிரமாணம் செய்ய மாட்டேன் என்றும் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

முன்னாள் நிதியமைச்சரும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்‌ஷவின் எம்.பி பதவி வெற்றிடத்துக்கு, வர்த்தகர் தம்மிக்க பெரேராவை நியமித்த தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி, மாற்றுக் கொள்கைக்கான நிலையம் அடிப்படை உரிமை மனுவொன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 99 (ஆ) பிரிவின் பிரகாரம், பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியலில் வெற்றிடம் நிலவுமாயின். அந்த வெற்றிடத்துக்கு, அந்த அரசியல் கட்சியில் இருந்து தேர்தலில் போட்டியிட்ட அல்லது வேட்பு மனுவில் பெயர் இருக்கின்ற இன்றேல், தேசியப்பட்டியல் பெயர் இருக்கின்றவர்களையே நியமிக்கவேண்டும்.

அதனடிப்படையில் பாரக்குமிடத்து வர்த்தகர் தம்மிக்க பெரேரா, மே​லே குறிப்பிடப்பட்டிருக்கும் எந்தவொரு பட்டியலில் உள்வாங்கப்படாதவர். ஆகையால், அரசியலமைப்பின் 99 (ஆ) பிரிவின் பிரகாரம், தேசியப்பட்டியலின் ஊடாக எம்.பி பதவியை வகிப்பதற்கு அவர் எவ்வகையிலும் தகுதியற்றவர் என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தகரான தம்மிக பெரேரா பல்வேறு துறைகளின் கீழ் பல வர்த்தகங்களுக்குச் சொந்தக்காரர், அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையோ இன்றேல் அமைச்சர் பதவியையோ வகிப்பாராயின் பக்கச்சார்பு மற்றும் ஆர்வம் தொடர்பிலான பிரச்சினைகள் எழும் என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தம்மிக்க பெரேராவை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தமை சட்டத்தின் பிரகாரமும், அரசியலமைப்பின் உறுப்புரையின் பிரகாரமும் தவறானது.

ஆகையால் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறும். அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என அறிவிக்குமாறும். வர்த்தகரான தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமையை தடுத்து, இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.