ஜனாதிபதி தேர்தல்: பாரதிய ஜனதா வேட்பாளர் இந்த வார இறுதியில் அறிவிப்பு..!!
இந்தியாவின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதி பதவிக்கு போட்டியின்றி ஒருவரை ஏகமனதாக தேர்வு செய்யலாம் என்று மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி கருதுகிறது. இதற்காக எதிர்க் கட்சிகளுடன் பா.ஜனதா தலைவர்கள் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் அணி சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை போட்டியிட வைக்க வேண்டும் என்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்காக மம்தா பானர்ஜி டெல்லியில் நடத்திய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் பிசு பிசுத்து தோல்வியில் முடிந்தது.
எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக களம் இறங்க சரத்பவார், பரூக் அப்துல்லா ஆகிய இருவரும் மறுத்த நிலையில் மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி கோபாலகிருஷ்ண காந்தியை பொது வேட்பாளராக நிறுத்தலாம், என்று ஆலோசித்து வருகிறார்கள். நாளை இதுகுறித்து முடிவு செய்ய எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார். இதனால் எதிர்க் கட்சிகளால் ஒருமித்த கருத்துடன் பொதுவேட்பாளரை தேர்வு செய்ய முடியுமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்றும், நாளையும் கர்நாடகா மாநிலத்தில் இருக்கிறார். எனவே நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் அவர் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்து வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார இறுதிக்குள் பா.ஜனதாவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தெரிய வாய்ப்புள்ளது. அதேசமயத்தில் எதிர்க்கட்சிகள் சார்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பா.ஜனதா சார்பில் 25-ந்தேதிக்கு பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் கவர்னர் திரவுபதி முர்மு மற்றும் 4 பேருடைய பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. என்றாலும் கடைசி நிமிடத்தில் பிரதமர் மோடியின் திட்டம் காரணமாக இதுவரை பேசப்படாத ஒரு தலைவரை ஜனாதிபதி ஆக்க பா.ஜனதா அறிவிப்பு வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. எனவே பா.ஜனதாவின் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.