சு.க – நிமல் விவகாரம்: தடையுத்தரவு நீடிப்பு !!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பதவிகளில் இருந்து, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவதற்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவை புதன்கிழமை (22) வரை நீட்டித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதி பூர்ணிமா பரணகம, இன்று (20) கட்டளையிட்டார்.
அமைச்சராக பதவியேற்ற, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவை கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்குவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்தது.
இதனையடுத்து, கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவில், கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பொருளாளர் லசந்த அழகியவன்ன உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிட்டிருந்தனர்.
இந்த மனு இன்றையதினம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, வழக்கை சமரசம் செய்வது குறித்து மனுதாரர் தரப்புடன் கலந்துரையாடுவதாக குறிப்பிட்டார்.
தீர்வு எட்டப்படாவிடின், இடைக்கால உத்தரவு குறித்து ஆட்சேபனை தெரிவிக்கப்படும் என்றும் அறிவித்தமைக்கு அமையவே தடையுத்தரவை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 7ஆம் திகதி மனு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவது அல்லது கட்சிக்குள் செயற்படவிடாமல் தடுப்பது ஆகிய செயற்பாடுகளை இடைநிறுத்தி இன்று (20) வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு மற்றும் நிறைவேற்றுக் குழுவில் இருந்து நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவது, நிர்வாக சபையின் மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்குவது மற்றும் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்குவது அல்லது வேறு ஏதேனும் தீர்மானம் மேற்கொள்ளப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.