ஜோன்ஸ்டனின் ரிட் மனு தள்ளுபடி !!
தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (21) தள்ளுபடி செய்தது.
காலிமுகத்திடல் கோட்டா கோகம மற்றும் அலரிமாளிகைக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த மைனா கோகம ஆகியவற்றில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஜோன்ஸ்டன் எம்.பி சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கணேபொல ஆகியோரடங்கிய அமர்வு முன்னிலையில் மனு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது, ரிட் மனு தாக்கல் செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், மனுதாரரை கைது செய்ய நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்படவில்லை என்று நீதியரசர்கள் அமர்வு சுட்டிக்காட்டியது.
சாத்தியமான குற்றத்தில் தனக்கு எதிராக எந்த சந்தேகமும் இல்லை என்று மனுதாரர் வாதத்தை எழுப்புவது நியாயமானது அல்ல என்றும் அலரிமாளிகையில் மனுதாரர் ஆற்றி உரையை ஆராய்ந்து, மனுதாரர் குற்றம் செய்தாரா என்பது குறித்து தீர்மானிக்க நீதவான் சிறந்த நபர் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கருதுகிறது என்றும் அறிவிக்கப்பட்டது.
தாக்குதல்கள் தொடர்பில் ஜோன்ஸ்டன் எம்.பி நீதிமன்றில் முன்னிலையாகும்போது கொழும்பு கோட்டை நீதவான் சட்டத்தின் அடிப்படையில் புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
சட்டமா அதிபரின் தீர்மானங்களிலும் முதன்மையான பார்வையிலும் அப்பட்டமான பிழைகள் எதுவும் இல்லை என்பதால், தனது அதிகாரத்தை சட்டமா அதிபர் மீறியதாகக் காட்டுவதற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டது.
மனுதாரர் குறைந்தபட்ச காரணங்களை பூர்த்தி செய்யாதமையால் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய தன்னை சந்தேக நபராக பெயரிட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், தன்னைக் கைது செய்ய தயாராகி வருவதாகவும் தனது மனுவில் ஜோன்ஸ்டன் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்னைக் கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தை மனுதாரர் தனது மனுவில் கோரியிருந்ததுடன், பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் உட்பட சிலர் மனுவில் பிரதிவாதிகளாக பெயரிட்டுள்ளனர்.
இந்த மனுவின் அடிப்படையில் அவரை நீதவான் நீதிமன்றில் சரணடையுமாறு கடந்த 9ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் சரணடைந்த அவர் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டதுடன், அவருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.