திருத்தணி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசைவீடு தீப்பிடித்து எரிந்தது..!!
திருத்தணி அடுத்த சிவாடா காலனியை சேர்ந்தவர் பழனி. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அனைவரும் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் திருத்தணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றபோது திடீரென வீட்டில் இருந்த கியாஸ் சிலின்டர் வெடித்து சிதறியது. மேலும் குடிசை வீடு முழுவதும் பற்றி எரிந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த தனுஷ் (வயது 20) என்பவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டு கருகினார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருத்தணி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அப்போது வீட்டில் இருந்த வெடிக்காத மற்றொரு கியாஸ் சிலின்டரை பத்திரமாக வெளியில் எடுத்ததால் மேலும் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இந்த தீவிபத்தில் குடிசை வீடு இடிந்து தரைமட்டமானது. வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். வீட்டில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 6 சவரன் தங்க நகை, டி.வி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதா? அல்லது மின்கசிவு காரணமாக? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.