தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு- காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6-ம் தேதி நடைபெறும்..!!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவேரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருப்பதாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் கூறியிருந்தார். இதற்கு தமிழகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம், இது தொடர்பாகக் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் விவாதிப்பது தவறானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டம் உச்சநீதிமன்றத்தில் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்கக்கூடாது என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6-ம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.