கர்மவினை வாழ விடாது ; பௌத்தம் சொல்கிறது என்கிறார் ஸ்ரீதரன் எம்.பி!!
நீதிமன்ற கட்டளைகளை பிக்குமார் மீற முடியுமா? அப்படி மீறும் பிக்குமார்களுக்கு நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனை என்ன? நீதிமன்றத்தின் கட்டளையை மீறும் உரிமையை பிக்குகளுக்கு யார் கொடுத்தது? என்பது தொடர்பில் நீத்தித்துறை தெளிவுபடுத்த வேண்டுமென சபையில் வலியுறுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பியான எஸ்.ஸ்ரீதரன் கருணை, காருண்ணியம், அன்பு, சகோதரத்துவம் பற்றிக்கற்பித்த புத்த பகவானை ஒரு யுத்த வடிவமாக, ஆக்கிரமிப்பின் வடிவமாக சிங்களத்தலைவர்களும் பிக்குகளும் மாற்றியுள்ளது என்றார்.
குருந்தூர் மலையில் நீங்கள் செய்யும் அநியாயம், நீங்கள் செய்யும் கர்ம வினைகள் உங்களை வாழ விடாது. இதுதொடர்பில் பௌத்தம் என்ன சொல்லியிருக்கிறது என்பது தொடர்பிலான புகைப்படங்கள் அனுராதபுரத்திலேயே இருக்கின்றன. கொதிக்கும் எண்ணெய் நிறைந்த தாச்சியில் ஒருவரை தூக்கிப்போட்டு வதைக்கொடுப்பதாகவும் படங்கள் உள்ளன என நினைவுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை கோவை திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டிய அவர் மேலும் கூறுகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர்மலை எனும் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக ஆதிசிவனை வழிபட்ட வாழ்விடத்தில், பிக்குகள் ஏதுமறியாத அப்பாவி சிங்கள மக்கள் அழைத்து வந்து நூற்றுக்கணக்கான இராணுவம், பொலிஸார், கடற்படையின் பாதுகாப்போடு புத்த பகவானின் சிலையை வைப்பதற்காக முற்பட்டார்கள்.
கருணை, காருண்ணியம், அன்பு, சகோதரத்துவம் பற்றிக்கற்பித்த புத்த பகவானை ஒரு யுத்த வடிவமாக, ஆக்கிரமிப்பின் வடிவமாக சிலை நிறுவ முற்பட்டபோது, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஏனைய மாவட்டங்களிலிருந்து சென்ற தமிழர்கள் அங்கே ஒரு போராட்டத்தை நடத்தி அதனை தடுத்துள்ளார்கள்.
ஏற்கனவே நீதிமன்றத்தின் தடை உத்தரவுள்ளது. இங்கே இரு மதம் சார்ந்தவர்களும் கட்டுமானப்பணிகள் எதனையும் செய்யக்கூடாது என்று முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறான நீதிமன்ற உத்தரவை மீறி இந்த நாட்டிலே பிக்குகள், பொலிஸாரையும் வைத்துக்கொண்டு புத்த பகவானின் சிலையை நிறுவ முடியுமா? அப்படியானால் நீதிமன்றம் யாருடைய பக்கம் உள்ளது? நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறும் உரிமையை பிக்குகளுக்கு யார் கொடுத்தது?
நீங்கள் குருந்தூர் மலையில் செய்யும் அநியாயம், நீங்கள் செய்யும் கர்ம வினைகள் உங்களை வாழ விடாது. ஒருவர் செய்யும் பாவங்களுக்கு அவர் நரகத்துக்கு சென்றால் என்ன தண்டனை என பௌத்தம் சொல்கின்றது.
இது தெரிந்துமா சிங்கள தலைவர்கள், பிக்குமார்கள் இந்த அநியாயங்களை செய்கின்றார்கள்? எனவே இந்த கர்ம வினைகளிலிருந்து நாடு தப்ப வேண்டுமானால் நீதிமன்றங்களின் கட்டளைகளை நிறைவேற்ற இந்த பாராளுமன்றம் கட்டளையிட வேண்டும் என்றார்.