அதிகாரிகளின் அசமந்தம், கிராமபுற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது! அதிபர் குற்றச்சாட்டு..!!
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரிக்கு, வவுனியா நகரப்பகுதியிலிருந்து அதிகமான ஆசிரியர்கள் வருகை தரும் நிலையில், யாழ் மாவட்டதிலிருந்து பதினைந்து ஆசிரியர்கள் வருகை தருகின்றனர். இருந்தபோதும் எரிபொருள் கிடைக்காமை காரணங்காட்டி எமது பாடசாலைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக கல்லூரியின் அதிபர் க.தனபாலசிங்கம் சுட்டிக்காட்டினார்.
நகரப்பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை சூம் தொழில்நுட்பம் மூலம் நடத்துமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளதுடன், கிராமம்புற பாடசாலைகளை தொடர்ந்தும் நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் போன்ற அதிகாரிகள் கிராமப்புற பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், ஓமந்தை மத்திய கல்லூரி உட்பட கிராமப்புற பாடசாலைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான கூப்பன் அட்டை வழங்கப்பட்டு, எரிபொருளும் வழங்கப்படுகின்றது.
கிராமப்புற பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்காத காரணதர்தினால் பாடசாலை கல்வி பெரிதும் பாதிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஒன்பதாம் மாதம் கா.பொ.சாதாரணதரப்பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றவுள்ள நிலையில், கிராமப்புற பாடசாலைகளில் சூம் தொழில்நுட்பத்தில் கல்விகற்க முடியாத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நேரடியாக சென்று கல்வி கற்பிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
அத்துடன் கிராமபுறங்களில் மாலைநேர வகுப்புக்களோ அல்லது தனியார் கல்வி நிலையங்களோ இல்லாத நிலையில் கிரமபுற மாணவர்கள் பாடசாலை கல்வியை மாத்திரமே நம்பியுள்ளனர். கிராமபுறங்களில் வசித்து, கல்வி கற்றுவரும் மாணவர்கள் தங்கள் கல்வியை இழப்பார்களேயானால் மீண்டும் அவர்களுக்கு கல்வியை வழங்குவது சிரமமான காரியமாக இருக்கும், ஆகவே கிரமபுற மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமானால் வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலாளர் எரிபொருள் பிரச்சனையை கவனத்தில் எடுத்து கிராமபுற பாடசாலை செல்லும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.