மகாராஷ்டிராவில் பரபரப்பு – சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கூட்டணி அரசுக்கு திடீர் ஆபத்து..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவை சேர்ந்த ஒரு பகுதி எம்.எல்.ஏ.க்கள் திடீரென மாயமாகி, அவர்கள் குஜராத் ஓட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் சிவசேனா அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு ஆட்சியமைக்கும் முயற்சியில் பா.ஜ.க. தீவிரம் காட்டியுள்ளது. 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர மாநில சட்டசபைக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்துப் போட்டியிட்டன. இதில் 105 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் மந்திரி பதவியில் பங்கு கேட்டு சிவசேனா வற்புறுத்தியது. பா.ஜ.க. இதை ஏற்க மறுத்ததால் அங்கு அரசியல் பூகம்பம் ஏற்பட்டது. சிவசேனா கட்சி தனது இந்துத்வா கொள்கைக்கு மாறான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்து 162 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாகவும், தேசியவாத காங்கிரசின் அஜித்பவார் துணை முதல் மந்திரியாகவும் நவம்பர் 30-ம் தேதி பதவியேற்றனர். உத்தவ் தாக்கரே அரசு இரண்டரை ஆண்டுகளைக் கடந்து ஆட்சி செய்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலிலும், நேற்று முன்தினம் நடந்த மகாராஷ்டிர மேல்சபை தேர்தலிலும் ஆளும் கூட்டணியை மிஞ்சி பா.ஜ.க. வெற்றி பெற்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் மேல் சபைக்கு நடந்த தேர்தலின் போது மாலை 5 மணி வரை சிவசேனா சட்டமன்ற குழு தலைவரான மந்திரி ஏக்நாத் ஷிண்டே, முதல் மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் இருந்தார். அதன்பிறகு அவரும், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சிலரும் திடீரென மாயமாகினர். அவர்கள் குஜராத் மாநிலம் சூரத்திற்கு இரவோடு இரவாக சென்று அங்குள்ள ஓட்டலில் தங்கியது தெரியவந்தது. நேற்று காலை மேலும் சில சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் சூரத் ஓட்டலுக்கு சென்று அவர்களோடு தங்கினர். ஏக்நாத் ஷிண்டேயுடன் இருக்கும் 22 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியல் வெளியானது. இருப்பினும் தங்களது அணியில் 30-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக அவர்கள் கூறினர். அவர்கள் சிவசேனா தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பா.ஜ.க.வுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகின. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அமைக்க பா.ஜ.க. தீவிரம் காட்டியுள்ளது. ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ஆட்சியைக் கவிழ்க்கும் பா.ஜ.க.வின் முயற்சி பலிக்காது என சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.