பொது மக்களிற்கு, எரிபொருள் விநியோகத்திலும் அநாவசியமாக மேலதிக துன்பங்கள் ஏற்படுவது தடுக்கப்பட்ட வேண்டும் – தமிழ்த் தேசியக் கட்சி..!!
இன்றைய சூழ்நிலையில் தினமும் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து நிற்கும் பொது மக்களிற்கு, எரிபொருள் விநியோகத்திலும் அநாவசியமாக மேலதிக துன்பங்கள் ஏற்படுவது தடுக்கப்பட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
அவர் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படும் சிறிதளவு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக, மிக நீண்ட நேரம், பல்வேறு அசௌகரியங்களோடு வீதிகளில் நின்று கொண்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் மத்தியில் சில வேளைகளில் முரண்பாடுகளும் சச்சரவுகளும் ஏற்படுவது ஆச்சரியமானது அல்ல.
இந்த நீண்ட வரிசைகளில் ஒழுங்கு முறைகளை மீறி, சமூகப் பொறுப்பற்று செயற்படும் பல நபர்களும் எம் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர்.
இன்றைய சூழ்நிலையில் சகல எரிபொருள் நிலையங்களும் விநியோக நடவடிக்கைகளை நேர்மையாக மேற்கொள்வதாக கருதமுடியாமலும் உள்ளது. இந்த நிலைமையில் எரிபொருளுக்கான நீண்ட வரிசைகளில் சில சந்தர்ப்பங்களில் ஏற்படும் அமைதியின்மையை கையாள்வதற்கு இராணுவத்தை ஈடுபடுத்தும்போது பிரச்சினை மோசமடைவதையும் கண்மூடித்தனமான பலாத்கார பிரயோகம் அடக்குமுறையாக விஸ்வரூபம் எடுப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
கடந்த 18ம் திகதி முல்லைத்தீவு, விசுவமடுவில் பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதலும், அதை அடுத்து ஏவப்பட்ட அடக்கு முறை அட்டகாசமும் இந்த நெருக்கடியான கால கட்டத்தில் இனிமேலும் நிகழக் கூடாது.
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து இராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்வதன் மூலமே இதனை உறுதிப்படுத்த முடியும்.
இந்த நடவடிக்கைகளில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டும் பொறுப்பு பொலீஸ் துறைக்கே உரியது. இதில் இராணுவத் தலையீடு தேவையற்றது.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் இதுவே பொருத்தமான அனுகுமுறை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
எரிபொருள் விநியோக விடயத்தில் சகலரின் ஒத்துழைப்பையும் கோரியுள்ள வட மாகாண ஆளுனர் இதனை கவனத்தில் கொள்ள முன்வர வேண்டும் என விரும்புகின்றோம்.
இன்றைய சூழ்நிலையில் தினமும் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து நிற்கும் பொது மக்களுற்கு, அநாவசியமாக மேலதிக துன்பங்களும் ஏற்படுவது தடுக்கப்பட்டேயாக வேண்டும் என்றுள்ளது.