பாரதிய ஜனதாவில் இருந்து விலக நடிகர் சுரேஷ் கோபி முடிவா..!!
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் சுரேஷ் கோபி. சினிமாவில் உச்சம் தொட்ட சுரேஷ் கோபியை பாரதிய ஜனதா கட்சி டெல்லி மேல்சபை எம்.பி. ஆக்கியது. இதன் மூலம் அரசியலுக்கு வந்த சுரேஷ் கோபி, கேரள சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிட்டார். இதில் அவர் தோல்வி அடைந்தாலும் கட்சியினர் இடையே அவருக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. சுரேஷ் கோபியை கேரள மாநில பாரதிய ஜனதா தலைவராக ஆக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி அவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் மாநில கட்சி தலைவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த பதவி அவருக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் சுரேஷ் கோபியின் மேல்சபை எம்.பி. பதவி கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிந்தது. எனவே அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. சமீபத்தில் நடந்த மேல்சபை எம்.பி. தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதா சார்பில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாநில தலைவர் பதவி மற்றும் மேல்சபை எம்.பி. பதவி கிடைக்காததால் சுரேஷ் கோபி, பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக போவதாக தகவல்கள் பரவியது. இதுபற்றி நடிகர் சுரேஷ் கோபியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அதுபோல உள்துறை மந்திரி அமித்ஷா, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரை பெரிதும் மதிக்கிறேன். எந்த சூழ்நிலையிலும் இவர்களுக்கு ஆதரவாகவே இருப்பேன். பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார். நடிகர் சுரேஷ் கோபி மேல்சபை எம்.பி.யாக இருந்தபோது அவருக்கு அரசு சார்பில் டெல்லியில் வீடு வழங்கப்பட்டு இருந்தது. தற்போது மேல்சபை எம்.பி. பதவி காலம் முடிந்ததால் அவர் டெல்லியில் உள்ள அரசு வீட்டை காலி செய்ய உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் முகாமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.