மகாராஷ்டிர முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ராஜினாமா?: சட்டசபையை கலைக்க முடிவு..!!
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ.) கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த மேல்சபை தேர்தலில் பா.ஜனதா 3 இடத்தை பிடித்தது. கூடுதலாக ஒரு இடத்தை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த மகாராஷ்டிர எம்.எல்.சி. தேர்தலிலும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டு போட்டனர். பா.ஜனதாவின் 5 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தோல்வி அடைந்தார். மொத்தம் உள்ள 10 இடங்களில் சிவசேனா கூட்டணி, பா.ஜனதா தலா 5 இடங்களில் வெற்றி பெற்றன. பா.ஜனதாவுக்கு கூடுதலாக ஒரு இடம் கிடைத்தது. மேல்சபை எம்.பி. தேர்தலை போல எம்.எல்.சி. தேர்தலிலும் திடீர் திருப்பம் ஏற்பட்டதால் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி கோஷ்டி உருவானது. அவருடைய தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் இருந்து பா.ஜனதா ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு சென்றனர். அங்குள்ள சொகுசு ஓட்டலில் அவர்கள் தங்கி இருந்தனர். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு எதிராக அவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களான பட்னாவிஸ் நாராயணரானே ஆகியோர் ஏக்நாத் ஷிண்டே தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியானது. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 14 பேர், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் ஆகியோர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால் ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்று தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் தெரிவித்துள்ளன. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை உத்தவ் தாக்கரே சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குஜராத்தில் இருந்து இன்று அதிகாலை அசாம் மாநிலம் கவுகாத்தி சென்றனர். அங்கும் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மும்பையில் இருந்து சிவசேனா தலைவர்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு வந்ததால் அவர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். சிவசேனாவின் இந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அசாம் பா.ஜனதா தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள். முதல்-மந்திரி ஹேமந்த் பிஸ்வாசும் அவர்களை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு 46 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதில் 40 பேர் சிவசேனாவை சேர்ந்தவர்கள். 6 பேர் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள். இதுதொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:- சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் உள்பட 46 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது. நான் பால்தாக்கரேயின் சிவசேனாவை விட்டு செல்ல மாட்டேன். நாங்கள் இந்துத்துவாவை நம்ப கூடியவர்கள். சிவசேனாவை ஒருபோதும் இரண்டாக உடைக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்தியில் தங்கி இருக்கும் நட்சத்திர ஓட்டலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் சிவசேனாவுக்கு 55 உறுப்பினர்களும், தேசியவாத காங்கிரசுக்கு 53 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 44 உறுப்பினர்களும் உள்ளனர். சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகள் 12 பேர் அரசுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் உத்தவ் தாக்கரே அரசின் ஆதரவு 164 உள்ளது. எதிர்கட்சியான பா.ஜனதாவுக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மேலும் 15 பேர் ஆதரவாக உள்ளனர். இதனால் பா.ஜனதா கூட்டணி பலம் 121 ஆக உள்ளது. மஜ்லிஸ் கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. தற்போது சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் பெரும்பான்மை இழந்து ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் சிவசேனாவின் முயற்சி தொடர்ந்து தோல்வி அடைந்தது. இதனால் பெரும்பான்மையை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து மகாராஷ்டிர சட்டசபையை கலைக்க சிவசேனா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- மகாராஷ்டிர சட்டசபை கலைக்கப்படும் சூழல் தற்போது நிலவி வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் மகாராஷ்டிர முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று பிற்பகல் மகாராஷ்டிர மந்திரி சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் முடிவில் உத்தவ் தாக்கரே தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் பட்சத்தில் மகாராஷ்டிரத்தில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றும். சிவசேனா அதிருப்தி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது.