கனடாவில் உயிரிழந்த முல்லைத்தீவு வீரருக்கு அஞ்சலி !!!
முல்லைத்தீவு – முள்ளியவளை 2ஆம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும், கனடா ஒட்டாவா நகரை வதிவிடமாகவும் கொண்ட கனேடிய இராணுவத்தின் முன்னாள் இராணுவ வீரரும், நேட்டோ படையணியின் தொழில் நுட்ப உயர் அதிகாரியும், ஒட்டாவா மாகாண பொலிஸ் உயர் அதிகாரியுமான மதியழகன் விஜயாலயன் கடந்த 14.06.2022 அன்று மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றின் போது உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை கனடாவில் இராணுவ மரியாதையுடன் இவரது சடலம் எரியூட்டப்படவுள்ளதுடன் அவரின் பிறந்த இடமான முல்லைத்தீவில் நாளை காலை 10.00 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அவரின் உயிரிழப்பிற்கு கனேடிய பாராளுமன்றத்தில் லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி பாராளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் தனது அஞ்சலியில்,
“கனேடிய தமிழனான மதியழகன் விஜயாலயன் கனடாவில் இராணுவத்தில் இணைந்து 2018 கலப்பகுதியில் உக்ரைனில் operation unifier என்ற நடவடிக்கையில் சிறந்த வீரனாக கண்ணிவெடிகளை அகற்றுவதிலும் படைகளுக்கு பயிற்சி அளிப்பதிலும் தனது திறமைகளை காட்டினார்.
இவரின் அபார திறமையால் பல உக்ரேனிய வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற உதவி செய்தார்.
பின்னர் தனது கடமைகளை முடித்து 2020 இல் ஒட்டாவா பொலிஸ் சேவையில் இணைந்த அவர் தனது கடமைகளை சிறப்பாக செய்தார்.
நேர்மையாகவும் அன்பான இயல்பும் மற்றும் தன்னலமற்ற தன்மையும் கொண்ட இவர், ஒட்டாவா மக்கள் மனதில் என்றும் இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
ஒட்டாவா பொலிஸ் சேவைகள், அவரது நெருங்கிய ஒட்டாவா தமிழ் சமூகம் மற்றும் கனடா முழுவதும் வளர்ந்து வரும் தமிழ் மக்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை விட்டு செல்கிறார் என கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.