கேரளாவில் ஒரே நாளில் 4,224 பேருக்கு தொற்று- கொரோனா தினசரி பாதிப்பு 13,313 ஆக உயர்வு..!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும், சற்று குறைவதுமாக உள்ளது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,313 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று பாதிப்பு 12,249 ஆக இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. கேரளாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நாள் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அங்கு புதிதாக 4,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரத்தில் 3,260, டெல்லியில் 928, தமிழ்நாட்டில் 771, உத்தரபிரதேசத்தில் 678, கர்நாடகாவில் 676, அரியானாவில் 527, தெலுங்கானாவில் 434, குஜராத்தில் 407, மேற்கு வங்கத்தில் 295 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. நாட்டில் மொத்த பாதிப்பு 4 கோடியே 33 லட்சத்து 44 ஆயிரத்து 958 ஆக உயர்ந்தது. கொரோனா மீட்பு சிகிச்சையில் இருந்து 10,972 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 36 ஆயிரத்து 27 ஆக உயர்ந்தது. தற்போது 83,990 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 2,303 அதிகம் ஆகும். தொற்று பாதிப்பால் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 20 மரணங்கள் மற்றும் நேற்று உத்தரபிரதேசத்தில் 4 பேர், டெல்லி, மகாராஷ்டிரத்தில் தலா 3 பேர், மேற்குவங்கம், பஞ்சாபில் தலா 2 பேர், அரியானா, ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், மிசோரத்தில் தலா ஒருவர் என மேலும் 38 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,24,941 ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் நேற்று 14,91,941 டோஸ்களும், இதுவரை 196 கோடியே 62 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாள்தோறும் பரிசோதனை சராசரியாக 4 லட்சம் என்ற அளவிலேயே இருந்து வந்தது. தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் பரிசோதனையை அதிகரிக்குமாறு மத்திய அரசு மாநிலங்களை அறிவுறுத்தியது. அதன்படி நேற்று 6,56,410 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 85.94 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.