கறுப்பு சந்தை வியாபாரிகளால் யாழ் இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது – அங்கஜன் குற்றச்சாட்டு!
கறுப்பு சந்தை வியாபாரிகளாலும், அடாவடி கும்பல்களாலும் இன்று ஓர் இளைஞனின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோசடிகளும், மோதல் நிலைகளும் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படும் சூழலில் இந்த மரணம் அதன் தீவிர நிலையை வெளிப்படுத்தியுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழக்கூடாது என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் , உயிரிழந்த இளைஞனுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் தனது உத்தியோக பூர்வ முகநூலில் நாடாளுமன்ற உறுப்பினர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எனது ஆதரவாளரும், J/186 உடுவில் வடக்கு கிராம இணைப்பாளருமான செல்வரத்தினம் பிரசாந் அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலுக்காக காத்திருந்தவேளை ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார்.
செல்வரத்தினம் பிரசாந் துடிப்பான ஆற்றல் மிகுந்த ஓர் இளைஞராக எனது அரசியல் பணிகளில் பங்காற்றியுள்ளார்.
நேர்மையோடும் அன்போடும் பழகும் குடும்ப சூழலில் வாழ்ந்த இளைஞனை இன்று நாம் இழந்துவிட்டோம். அண்மையில் உடுவில் வடக்கு கிராமத்துக்கு நாம் சென்றபோது, அக்கிராம மக்களின் தேவைகள், பிரச்சினைகள் குறித்து தெளிவான விளக்கங்களை முன்வைத்திருந்தார். அவரது சமூகம் மீதான பார்வையும், மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையும் எனக்கு எப்போதும் பிடித்தமானவை. ஒரு ஆற்றல் மிகுந்த, சிறந்த அரசியல் பார்வை கொண்ட ஒரு இளைஞன் இத்தகைய துர்ப்பாக்கிய நிலையில் உயிரிழந்துவிட்டார்.
இந்த மரணம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதது. மனிதநேயத்துக்கு விரோதமான இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
கறுப்பு சந்தை வியாபாரிகளாலும், அடாவடி கும்பல்களாலும் இன்று ஓர் இளைஞனின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோசடிகளும், மோதல் நிலைகளும் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படும் சூழலில் இந்த மரணம் அதன் தீவிர நிலையை வெளிப்படுத்தியுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழக்கூடாது.
யாழ் மாவட்ட அரச நிர்வாகத்தின் கீழ் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயற்படவுள்ள நிலையில்,
* எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பதிவு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மேலதிகமாக எவரையும் தம்மோடு வைத்திருக்க அனுமதிக்க கூடாது.
* முறையான வரிசைகளை பொலீசாரும், எரிபொருள் நிரப்பு நிலையத்தினரும் கடைப்பிடிக்க வேண்டும்
* பங்கீட்டு முறையை மீறுபவர்கள், வரிசை முறையை மீறுபவர்கள், திட்டமிட்டு குழப்பங்களை ஏற்படுத்துபவர்கள் மீது பக்கசார்பில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மக்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியானதும் கடுமையானதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கிறேன்.
எரிபொருள் தேவையோடு பல கஸ்டங்களோடு வாழும் மக்கள் அதனை பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அச்சமடைந்த மனநிலையோடு வரும் நிலமை இனிவருங்காலங்களில் இருக்க கூடாது என வலியுறுத்துகிறேன்.
யாழ்ப்பாண மக்களுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக 45 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இயங்குகின்றன.
தற்போதைய நெருக்கடி நிலையில் மாவட்டத்துக்கு கிடைக்கும் எரிபொருளை பங்கிட்டு அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.
இந்தப்பணியை செய்யத் தவறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும், ஒத்துழைப்பு தர மறுத்து அடாவடியில் ஈடுபடும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்க அதிபர், பெற்றோலிய கூட்டுத்தாபன பிராந்திய முகாமையாளர், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என்று உள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”