இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்க இந்தியா தயார் !!
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய நிதி அமைச்சின் செயலாளர் அஜய் சேத், தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் மற்றும் வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா ஆகியோர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்துகலந்துரையாடியிருந்தனர்.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு முழு மனதுடன் ஒத்துழைப்புக்களை வழங்கிவரும் இந்தியாவிற்கு தாம் நன்றிகளை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.
முதலீடுகளை மேம்படுத்தல், தொடர்புகள் மற்றும் பொருளாதார உறவுகளை வலுவாக்குதல் ஊடாக துரிதமான பொருளாதார மீட்சிக்கு இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக உள்ளதாக இச்சந்திப்பில் இந்திய தூதுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் என்ற கொள்கையில் இலங்கையின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய- இலங்கை உறவின் மேம்பாட்டிற்காக இரு தரப்பும் தமது அர்ப்பணிப்பினை இச்சந்திப்பின்போது உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பொருளாதார மீட்சியை அடைவதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து இரு தரப்பினரும் ஆழமாக கலந்துரையாடினர்.
இந்தச் சூழலில், இந்தியா-இலங்கை முதலீட்டை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர்.
குறிப்பாக உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார தொடர்புகள் ஆகிய துறைகளில் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
அதேபோல் வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ரா, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவையும் சந்தித்திருந்தார்.
இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பு செயற்பாடுகளில் பணியாற்ற தாம் விரும்புவதாகவும், இரு தரப்பு நட்புறவை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் இதன்போது இந்திய வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார் .
ஒருநாள் பயணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, விசேட விமானத்தின் மூலமாக இன்று (23) வருகைதந்திருந்த இந்திய தூதுக்குழுவினரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றார்.
மேலும், அந்த குழுவினர்,இன்று மாலையே புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.