இந்தியாவின் தார் பாலைவனத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிலந்திக்கு கேரள ஆராய்ச்சியாளர் பெயர்..!!
உலகம் முழுவதும் உள்ள பூச்சிகள் குறித்து விலங்கியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் புதிதாக கண்டுபிடிக்கப்படும் பூச்சி வகைளுக்கு ஆராய்சியாளர்கள் பெயரை சூட்டுவது வழக்கம். அந்த வகையில் இந்தியாவின் தார் பாலைவன பகுதியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிலந்தி வகைக்கு கேரளாவை சேர்ந்த பூச்சி இன ஆராய்ச்சியாளர் சுதிகுமாரின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்திய வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆஷிஷ் குமார், இங்கிலாந்தை சேர்ந்த டிமிட்ரி லோகுனோவ் மற்றும் ரிஷிகேஷ் பாலகிருஷ்ணா திரிபாதி ஆகியோர் தார் பாலைவன பகுதியில் கூட்டாக ஆராய்ச்சி மேற்கொண்டனர். அங்குதான் பாலைவனத்தின் உலர்ந்த புற்களில் இந்த வகை சிலந்தி காணப்பட்டது. உலகம் முழுவதும் இதுபோன்று 35 வகையான சிலந்தி வகைகள் உள்ளன. இந்தியாவில் இப்போதுதான் முதல்முறையாக இந்த வகை சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே தான் இந்த சிலந்தி வகைக்கு கேரள ஆராய்ச்சியாளரின் பெயரை சேர்த்து சூடோமோக்ரஸ் சுதி என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த சிலந்தியின் தலை சிறிய வெள்ளை முடிகளால் மூடப்பட்டிருக்கும். வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதன் வயிற்றில் இருண்ட நீள் வெட்டு பட்டை காணப்படும். பெண் பூச்சியின் தலை மஞ்சள் நிறத்திலும், கண்கள் கருப்பு நிறத்திலும் காணப்படுகிறது. இப்பூச்சி பற்றிய தகவல்கள் இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பூச்சிகள் பற்றிய அறிவியல் ஆய்வு இதழில் வெளியாகி உள்ளது.