சர்வதேச சமூகத்தின் உதவிகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் முறை குறித்து ஜனாதிபதிக்கு விளக்கிய ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள்!!
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் வழங்கும் ஸ்திரமான செய்தியின் மூலம் சர்வதேச சமூகத்தினருக்கு இலங்கைக்கு இலகுவாக ஒத்துழைப்புக்களை வழங்க முடியும் என்று ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐரோப்பிய பிராந்திய நாடுகளின் தூதுவர்கள் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்நாட்டின் சனத்தொகையில் 90 சதவீதமானோர் கிராம புறத்தவர்கள் என்பதோடு , அவர்களில் 75 சதவீதமானோர் விவசாயகத்தில் ஈடுபடுபவர்களாவர். அவர்களுக்குத் தேவையான உரம் மற்றும் எரிபொருள் என்பவற்றை வழங்குவதன் மூலம் , உணவு விநியோகம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.
விவசாயத்தில் ஈடுபடுவதற்கு ஆர்வத்துடன் செயற்படுபவர்களுக்கு காணப்படும் இடப்பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காக , பயன்படுத்தப்படாத அரச நிலங்களை அவர்களுக்கு விவசாயத்திற்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.
யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள மனிதாபிமான சூழ்நிலையை கருத்திற் கொண்டு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும் சட்டத்தை அமுல்படுத்துவதில் எவரது தலையீடும் இன்றி , கட்சி பேதமின்றி நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். முதலீடுகள் , அபிவிருத்தி , கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் இதன் போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டெனிஸ் சைபி, பிரான்ஸ், இதாலி, நோர்வே, நெதர்லாந்து, ஜேர்மன், ருமேணியா, துருக்கி, சுவிட்ஸர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”