இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் விடுத்துள்ள எச்சரிக்கை!!
இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியானது முழுவதுமான அவசரகால மனிதாபிமான நெருக்கடியாக மாறக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சுமார் 200 வகையான அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், அடுத்துவரும் இரண்டு அல்லது மூன்று மாதகாலத்தில் மேலும் 163 வகையான அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அவற்றுக்கு மேலதிகமாக சத்திரசிகிச்சைகளுக்கு அவசியமான 2700 இற்கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்களுக்கும், 250 இற்கும் மேற்பட்ட பொதுவான ஆய்வுகூட உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு அவசியமான எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக பல வைத்தியசாலைகள் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளைப் பிற்போடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இந்தப் பொருளாதார நெருக்கடி முழுவதுமான மனிதாபிமான அவசரகால நெருக்கடியாக மாறக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் எச்சரித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”