சிகிச்சை வழங்குவதில் சிக்கல் !!
எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரத்தில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான முறைமையோ அல்லது முறையான போக்குவரத்து வசதிகளோ வழங்கப்படாவிடின், சத்திரசிகிச்சைகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளை நடத்துவது சாத்தியமற்றதாக இருக்கும் என்றும் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் மருந்துப் பற்றாக்குறை காரணமாக சுகாதார சேவை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் சங்கத்தின் 31 கிளைகளின் பிரதிநிதிகள் இன்று (26) கூடி இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
சுகாதார சேவைக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் விநியோக முறையை நடைமுறைப்படுத்தாவிட்டால் கடமைகளை உரிய முறையில் செய்ய முடியாத நிலை ஏற்படும் என கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிலையில் நாளைமறுதினம் (28) சுகாதார அமைச்சரை சந்தித்து இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது.