;
Athirady Tamil News

காணாமல் போனோருக்கு நடந்தது என்ன?

0

தான் அறிந்த வகையில், வலிந்து காணாமல் போனோரது குடும்பங்களின் முதல் கேள்வி, முதல் கோரிக்கை யாதெனில், கடத்தப்பட்டு, சரணடைந்து, கைதாகி காணாமல் போன தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதே என்று தான் நினைப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

வடக்குக்கு விஜயம் செய்த நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும், காணாமல் போனோர் அலுவலக தலைவர் மஹேஷ் கடுலந்தவும் “மக்கள் ஒத்துழைத்தால், காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்” என கூறி வந்துள்ளனர் என்று மனோ எம்.பி சுட்டிக்காட்டினார்.

மேலும் “காணாமல் போனோர் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை, அரச வைத்தியசாலைகளில் முன்னுரிமை எனவும் வாக்குறுதிகளை அளித்துள்ளனர். மக்களிடமிருந்து என்ன ஒத்துழைப்பை இவர்கள் கோருகிறார்கள் என எனக்கு தெரியவில்லை“ என்று மனோ.எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார்.

“இந்த முதல் கேள்விக்கு பதில் தேடுங்கள். அதையடுத்து குடும்பங்கள் விரும்பினால், கொடுப்பனவுகள், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை, அரச வைத்தியசாலைகளில் முன்னுரிமை ஆகியவற்றை வழங்கலாம்“ என்று தெரிவித்த மனோ.எம்.பி, நீதி அமைச்சரும் அலுவலக தலைவர் மஹேஷ் கடுலந்தவும் இதைப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றார்.

இது குறித்து மனோ எம்பி மேலும் தெரிவித்ததாவது, “கடந்த ஆட்சி காலத்தின் கடைசி வருடத்தில், இந்த காணாமல் போனோர் அலுவலகம் எனது அமைச்சின் கீழ் இருந்தது.

அப்போது அதன் தலைவராக, இன்றைய இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சாலிய பீரிஸ் செயற்பட்டார். நிமல்கா பெர்ணாண்டோ ஆகியோரும் அங்கத்தவராக செயற்பட்டனர்.

அது ஒரு சுயாதீன ஆணைக்குழு அல்ல. எனினும் சுயாதீன ஆணைக்குழுவுக்கு சமானமாக அது சுதந்திரமாக செயற்பட நான் அனுமதி அளித்து இருந்தேன்.

வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் கொடுக்க, நிதி ஒதுக்கீடு செய்து, அதை வழங்க முயன்ற போது, அந்த குடும்பத்தவர் அதை வாங்க மறுத்த போது அதை வலியுறுத்த வேண்டாம் என நான் பணிப்புரை விடுத்தேன்.

மேலும் மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அலுவலகம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட நிகழ்வுகளில் அமைச்சரான நான் கலந்துக்கொள்வதை தவிர்த்தேன்.

தென்னிலங்கை மாத்தறையில் அலுவலகம் திறக்கப்பட்ட போது அதில் நான் கலந்து கொண்டேன். 1988களில் தென்னிலங்கையில் இப்படி காணாமல் போனவர்களின் சிங்கள இளையோரின் குடும்பங்கள், இந்த கொடுப்பனவுகளை பெற விருப்பம் தெரிவித்தபோது, அவற்றை வழங்க நான் பணிப்புரை விடுத்தேன்.

2015 ஒக்டோபர், மனித உரிமை ஆணைக்குழுவின் 30/1ம் தீர்மானத்தின்படி, இந்த காணாமல் போனோர் அலுவலக சட்டமூலத்தை நாம் கடந்த ஆட்சியின் போது நிறைவேற்றினோம். அன்று எதிர்கட்சியாக இருந்த, இன்றைய ஆளும்கட்சியான ராஜபக்ஷர்களின் பொதுஜன பெரமுன கட்சியினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இது நிகழ்ந்தது. எனினும் நாம் சட்டத்தை நிறைவேற்றி இந்த காணமல் போனோர் அலுவலகத்தை அமைத்தோம். இது ஒரு ஆரம்பம் மட்டுமே.

2018ஆம் ஆண்டு இந்த அலுவலகம் எனது பொறுப்பில் வந்தபோது, கடத்தப்பட்டு, சரணடைந்து, கைதாகி காணாமல் போன தங்கள் உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்பதே வலிந்து காணாமல் போனோர் குடும்பங்களின் முதல் கோரிக்கை என்பதை துறைசார் அமைச்சராக நான் உணர்ந்தே இருந்தேன். இன்றும் அப்படியே இருக்கிறேன்.

கடந்த ஆட்சியின் போது பல கட்டமைப்பு முன்னேற்றங்கள் நிகழ்ந்தாலும்கூட, அன்று எதிர்கட்சியாக இருந்த, இன்றைய ஆளும்கட்சியான ராஜபக்ஷர்களின் பொதுஜன பெரமுன எம்மை முழுமையாக கடமையாற்ற விடவில்லை. இந்த காணமல் போனோர் அலுவலகம், முன்னாள் புலிகளுக்கு கொடுப்பனவுகள் கொடுக்கின்றது எனவும், புலிகளுக்காகவே அது அமைக்கப்பட்டது எனவும் கூறினர்.

இன்று திடீரென முற்போக்கு ஜனநாயகவாதிகளாக வேடம் பூண்டுள்ள பல்வேறு பிரபல அரசியல்வாதிகளும் எம்மை எதிர்த்தார்கள். பிரபல பெளத்த பிக்குகள் இனவாதம் கக்கினார்கள். முன்னாள் புலிகளுக்காக அமைக்கப்பட்ட அலுவலகம் இன்னொரு பிரபல புலியின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது என என்னையும் திட்டி தீர்த்தார்கள்.

இன்று இவற்றுக்கு எல்லாம் பதில் கூறவேண்டிய காலம் வந்து விட்டது. இன்றும் இனவாதம் இல்லாமல் இல்லை. ஆனால், அந்த இனவாதத்தை நேரடியாக எதிர்க்கக்கூடிய காலம் வந்து விட்டது. மதம் அரசியலில் வேண்டாம் என்றும், விகாரைகளுக்கு திரும்புங்கள் என்றும் பெளத்த பிக்குகளை பார்த்து நேரடியாக கூறக்கூடிய காலம் வந்து விட்டது.

இவற்றையெல்லாம், இன்றைய பொருளாதார நெருக்கடி உருவாக்கி விட்டது. அந்த நெருக்கடித்தான், பெரும்பான்மை சிங்கள இளையோர் மத்தியில் காலிமுக திடல் போராட்டத்தையும் உருவாக்கி விட்டது.

ஆகவே இனி நாங்கள், “எங்கே எங்கள் உறவுகள்? கடத்தப்பட்டு, சரணடைந்து, கைதாகி காணாமல் போன எங்கள் உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா?” என கேள்விகள் எழுப்பும் வேளை வந்து விட்டது. 2007ஆம் வருடம் நானும், நண்பன் ரவிராஜும் ஆரம்பித்த மக்கள் கண்காணிப்பு குழுவின் நோக்கங்களை நிறைவேற்ற காலம் வந்து விட்டது என நினைக்கிறேன்“ என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.