ஆந்திராவில் என்ஜினீயரிங் கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் 11 பேர் சஸ்பெண்டு..!!
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். வெளியூர் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகி சிலர் தற்கொலைக்கு ஆளாகின்றனர். எனவே கல்லூரிகளில் ராக்கிங் செய்வது நாடு முழுவதிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் காக்கிநாடா என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை தொடர்ந்து ராக்கிங் செய்து வந்தனர். இதனால் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் ஜூனியர் மாணவர்கள் புகார் செய்தனர். இதையடுத்து ராக்கிங்கில் ஈடுபட்ட 11 மாணவர்களை 15 நாட்களுக்கு சஸ்பெண்டு செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.