ஜனாதிபதி தேர்தல்- யஷ்வந்த் சின்காவுக்கு சந்திரசேகரராவ் ஆதரவு..!!
ஜனாதிபதி தேர்தல் அடுத்தமாதம் (ஜூலை) 18-ந்தேதி நடக்கிறது. இதில் பாரதிய ஜனதா சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். திரவுபதி முர்முவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இதனால் அவர் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. யஷ்வந்த் சின்காவுக்கு சில மாநில கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறாத தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரும். தெலுங்கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சந்திரசேகரராவ் அறிவித்து உள்ளார். நாளை யஷ்வந்த்சின்கா வேட்பு மனுதாக்கல் செய்கிறார் இதில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி.க்கள் கேசவராவ், நாகேஸ்வர ராவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். யஷ்வந்த் சின்கா ஓட்டு சேகரிக்க ஐதாராபாத் வரும்போது அவரை தனியாக சந்திக்க சந்திர சேகரராவ் முடிவு செய்து உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.