மின் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை !!
மின்கட்டண அதிகரிப்பு 57 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் உத்தேச மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அறிய தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, இன்று (27) தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30 ஆம் பிரிவின் கீழ் 82 சதவீத கட்டண அதிகரிப்புக்கு இலங்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பெரும்பான்மையான வீட்டு மின் நுகர்வோருக்கு சலுகையாக கட்டண உயர்வு 57 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மாதாந்தம் 60 அலகுகளுக்கும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் 3.14 மில்லியன் வீட்டு பாவனையாளர்கள் உள்ளனர் என்றும் இது மொத்த வீட்டு மின் பாவனையார்களில் சுமார் 50சதவீதமாகும் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், 2014 ஆம் ஆண்டு கட்டண திருத்தத்துடன் இலங்கை மின்சார சபைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதை ஆணைக்குழு அவதானித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
டொலரில் வருமானம் ஈட்டும் நிறுவனங்களிடம் இருந்து மாதாந்த மின்கட்டணத்தை டொலர்களில் ஏற்றுக்கொள்ளுமாறு மின்சார சபையிடம் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
உத்தேச கட்டண திருத்தம் (பொது ஆலோசனை ஆவணம்) தொடர்பான தகவல்கள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஜூலை 18, 2022 வரை எழுத்துப்பூர்வ கருத்துகளை மின்னஞ்சல் அல்லது தொலைநகல் மூலம் சமர்ப்பிக்கலாம் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.