’பாரதூர விளைவுகளை புரிந்து கொள்ளுங்கள்’ !!
இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய தற்போதைய சூழ்நிலையின் தீவிரம் மற்றும் பாரதூரமான விளைவுகளைப் புரிந்து கொள்ளுமாறு ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் ஏனைய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் மீதான தேசிய மற்றும் சர்வதேச நம்பிக்கையை மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு மேற்குறிப்பிட்ட தரப்பினருக்கு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் இன்று (27) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வியடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள பற்றாக்குறையின் விதம் குறித்து மிகவும் கவலையடைவதாக தெரிவித்த சங்கம், நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைவதற்கு வழிவகுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக எரிபொருளானது இலங்கை அரசாங்கத்தால் பாதகமான முறையில் கையாளப்படுகிறது என்றும் மக்களின் வாழ்க்கை, நாட்டின் நிர்வாகம் மற்றும் வர்த்தகங்களை நடத்துதல் மற்றும் இறுதியில் சமூகத்தின் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை பாதிக்கிறது என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையானது, உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் உட்பட பொருளாதாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அச்சுறுத்துகிறது. இது, நீதி நிர்வாகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறுகிய காலத்தில் தொடர்ந்து எரிபொருளை வழங்குவதை உறுதிசெய்வது தொடர்பான அதன் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் போதுமான தகவல்களை உடனடியாக வழங்குமாறு அரசாங்கத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
எரிபொருள் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான அதன் திட்டங்கள் குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்துவதுடன், மக்களுக்கு நியாயமான மற்றும் சமமான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கான பயனுள்ள திட்டத்தை உடனடியாக வகுக்க வேண்டும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் நன்மை கருதி, மக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு ஜனாதிபதியும், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரும் பொறுப்பேற்க வேண்டியது அவசியமானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.