;
Athirady Tamil News

மத உணர்வை தூண்டியதாக பத்திரிகையாளர் கைது- ராகுல் காந்தி கண்டனம்..!!

0

டெல்லியில் இருந்து செயல்படும் ஆல்ட் நியூஸ் செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனரும், பத்திரிகையாளருமான முகமது ஜுபைர், மதம் சார்ந்த விஷயங்கள் பற்றி தொடர்ச்சியாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிலரது மத நம்பிக்கைகளை அவர் புண்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில், டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் ஜுபைரை கைது செய்தனர். அவர் மீது மத உணர்வுகளை தூண்டி சமூக அமைதியை சீர்குலைப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்றிரவு கைது செய்யப்பட்ட ஜுபைர், பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், முகமது ஜுபைர் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, பாஜகவின் வெறுப்பு மற்றும் மதவெறியை அம்பலப்படுத்தும் ஒவ்வொரு நபருக்கும் அக்கட்சியால் அச்சுறுத்தல் இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார். ஒரு உண்மையின் குரலைக் கைது செய்தால் இன்னும் ஆயிரம் குரல் எழும்பும் என்றும் தமது டுவிட்டர் பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பத்திரிகையாளருக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷும் ஆதரவு தெரிவித்துள்ளார். முகமது ஜுபைர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.