மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து- 7 பேர் உயிருடன் மீட்பு..!!
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை குர்லா பகுதியில் உள்ள நாயக் நகரில் நான்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் நேற்றிரவு இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக இடிபாடுகளில் இருந்து 7 பேர் உயிரிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 20 முதல் 25 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விபத்து குறித்து அறிந்த மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா தாக்கரே சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
4 அடுக்குமாடி கட்டிடத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது, ஆனால் மக்கள் தொடர்ந்து அங்கு வசித்து வந்தனர். அனைவரையும் மீட்பதே எங்கள் முன்னுரிமை. அருகில் உள்ள மக்கள் சிரமப்படாமல் இருக்க, காலையில் இந்தக் கட்டிடங்களை காலி செய்து இடிப்பது குறித்து ஆய்வு செய்வோம். மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பும் போதே அபாய நிலையில் உள்ள கட்டிடங்களை பொதுமக்கள் தாங்களாகவே காலி செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது, துரதிருஷ்டவசமானது. மும்பையில் இடிந்து விழும் தருவாயில் உள்ள கட்டிடங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பது இப்போது முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.