சஜித் கூறும் மக்கள் எழுச்சி!!
அரசாங்கம் நாட்டை பாரிய அவல நிலையை நோக்கியே இட்டுச்சென்றுள்ளதாகவும், இதற்கு எதிராக ஜனநாயக ரீதியான மக்கள் எழுச்சி உருவாக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இதனை இலக்காக் கொண்டு பாரிய அரசியல் பிரவேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு சகல கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்தை அகற்றும் வரை இந்த மக்கள் போராட்டம் ஓயாது எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தொடர் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இதன் முதற்கட்ட வேலைத்திட்டம் இன்று (28) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது.
அதன் பிரகாரம், நவ லங்கா நிதகஸ் பக்ஷய, பிரஜைகள் முன்னணி, ஐக்கிய இடதுசாரி முன்னணி, எங்கள் மக்கள் சக்தி கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சர்களின் இருக்கைகளைப் பாதுகாப்பது மட்டுமே அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவையாகும் எனவும், இவ்வாறான நிலையில் நாட்டு மக்கள் பாரிய துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
செயற்பட முடியாத அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனவும் அதன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி இந்நாட்டை கட்டியெழுப்பும் அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.