;
Athirady Tamil News

பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தை விற்க விடமாட்டோம்!!

0

நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில், அந்நெருக்கடியை பொருட்டாக வைத்து, நாட்டின் பெறுமதியான வளங்களில் ஒன்றான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய ராஜபக்ஸ குடும்பத்தினர் தலைமையிலான இந்த அரசின் முயற்சிகளை வன்மையாக கண்டிப்பதாகவும், இதில் சம்பந்தப்படும் சகல அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியினால் அமையப்பெறும் அரசாங்கத்தின் கீழ் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (28) தெரிவித்தார்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய முழுமையான செயல்பாட்டின் ஊடாக 100% மண்ணெண்ணெய் தேவையையும்,சுமார் 50% விமானங்களுக்கான எரிபொருள் தேவையையும், 100% நெக்டா தேவையையும், 30% டீசல், 14% பெட்ரோல், 8% எரிவாயு, மின் உற்பத்திக்குத் தேவையான பதப்படுத்தல் எரிபொருள் 75-100% வரையான தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய பெறுமதி மிக்க வளமாகும் எனவும், இந்நாட்டிலுள்ள தூரநோக்கற்ற,வினைதிறனற்ற அரச நிர்வாகத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள சீர்குலைவின் காரணமாக இந்த தேசிய வளத்தை திருட்டுத்தனமாக ஏலம் விடுவதற்கு முயற்சி செய்வதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசுக்குச் சொந்தமான மதிப்புமிக்க நிறுவனங்களை ஏலம் போட முயற்சி நடந்தால்,அதற்கெதிராக கட்சி கோதங்கள் இன்றி ஒரே நிலைப்பாட்டின் கீழ் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அவ்வாறே, இந்த அரச வளத்தைப் பாதுகாக்க முன்வந்த பெற்றோலிய தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பொன்று நேற்று (28) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய தொழிலாளர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சேனக பெரேரா,சரத் ​​அபேரத்ன,மனுல சமில் ஏகநாயக்க, இலங்கை சுதந்திர தொழிற்சங்க கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி கே.பி.சமிந்த, எஸ்.வி மாயாதுன்ன, பொது ஊழியர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அசோக் ரன்வல, மனோஜ் விஜேவீர, நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆர்.ஏ.டி.திலங்க, தேசிய ஊழியர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஏ.சி.வசந்த, வீரபாகு பெரேரா,பெற்றோலிய கைத்தொழில் ஊழியர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எல்.டி.சமரகோன், எல்.பிரியதர்ஷன, பொறியியலாளர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விக்கும் மாதவ, ஜனக உதான, லசந்த ஏக்கநாயக்க, லக்சிறி ரணதுங்க, சுத்திகரிப்பு கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி ஆக்ரா வீரசிங்க, சலக விஜேசிங்க உட்பட பிரதிநிதிகள் கலந்து கொண்டதோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதித்தலைவர் ராஜித சேனாரத்ன உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நிலவரம் தொடர்பிலும், இதிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.