உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவு… நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி..!!
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அரசு பெரும்பான்மையை இழந்தது. உத்தவ் தாக்கரே அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டார். இதையடுத்து மகாராஷ்டிர சட்டசபையில் நாளை சிறப்பு கூட்டத்தை கூட்டி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டு கடிதம் அனுப்பினார். கவர்னரின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து உத்தவ் தாக்கரே பேஸ்புக் நேரலையில் உரையாற்றினார். அப்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கூறினார். சட்ட மேலவை பதவியில் இருந்தும் விலகுவதாக தெரிவித்தார். தனக்கு யார் மீதும் வருத்தம் இல்லை என்று கூறிய அவர், தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக கூட்டணி ஆட்சியில் பங்கெடுத்து ஆதரவு தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார். இதையடுத்து நாளை அல்லது நாளை மறுதினம் தேவேந்திர பட்னாவிஸ், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அனுமதி கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.