இனி அஞ்சலக சேவைக்கும் ஜிஎஸ்டி… பல்வேறு பொருட்களுக்கு வரி உயர்வு..!!
47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் 2 ஆம் நாளான இன்று பல்வேறு பொருட்களுக்கான வரிகளை அதிரடியாக உயர்த்த ஜி.எஸ்.டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. எல்.இ.டி விளக்குகளுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சில தோல் பொருட்களுக்கனா வரி 5-ல் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பேனா, மை, கத்தி, பிளேடு ஸ்பூன்களுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. சாலைகள், பாலங்கள், ரெயில்வே, மெட்ரோ, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட ஒப்பந்த பணிகளுக்கான ஜி.எஸ்.டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், அஞ்சலக சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, இனி அஞ்சல் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. அதேசமயம், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்து முடிவு எட்டப்படவில்லை. அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் முதல் வாரம் நடைபெறும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.