கேரளாவில் பரவும் ஆந்த்ராக்ஸ் நோய்- மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!
கேரளாவின் அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதலால் காட்டுப்பன்றிகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கூட்டமாக இறந்து கிடந்த காட்டுப்பன்றிகளின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, ஆந்த்ராக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறையினர் கூட்டாக விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இயற்கையாகவே மண்ணில் காணப்படும் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியா பரவுவதைத் தடுக்க சுகாதாரத் துறை உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். காட்டுப்பன்றிகளின் சடலங்களை புதைக்கச் சென்றவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்குத் தேவையான தடுப்பு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அரசு கூறியுள்ளது. விலங்குகள் கூட்டமாக இறப்பது கண்டறியப்பட்டால், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கபட்டிருப்பதாகவும், இதுபோன்ற இடங்களுக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.