துரோகிகள் முதுகில் குத்திவிட்டனர்- உத்தவ் தாக்கரே உருக்கம்..!!
மகாராஷ்டிரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் மந்திரி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 943 நாட்கள் பதவியில் இருந்த உத்தவ் தாக்கரே நேற்று இரவு பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகியதும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த உத்தவ் தாக்கரே, அங்கிருந்த அம்பேத்கர் மற்றும் சிவாஜி உருவ படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு காரில் புறப்பட்டார். பின்னர் அவரும், 2 மகன்களும் மும்பையில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்பு உத்தவ் தாக்கரே கூறியதாவது:- மகாராஷ்டிர முதல் மந்திரியாக இருந்தபோது எனக்கு துணையாக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு உள்ளம் நிறைந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆட்சியை கவிழ்க்க சொந்த கட்சியினரே சதி செய்தனர். துரோகிகள் முதுகில் குத்தியதால் ஆட்சியை இழந்தேன். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே, அதிகாரிகளுக்கு நன்றி கூறியதாக, கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் கூறினார். கொரோனா பிரச்சினையின்போது அரசுக்கு உறுதுணையாக இருந்து தொற்று பரவலை கட்டுப்படுத்திய அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.