மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்- முதல்வர் ஆகிறார் ஏக்நாத் ஷிண்டே..!!
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்தது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி தந்த நிலையில், பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆட்சியமைக்கும் பணிகளை பாஜக தொடங்கியது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், சிவசேனா அதிருப்தி குழுவின் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது. ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பட்னாவிஸ் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உள்ளார் என்று இன்று மதியம் வரை தகவல் வெளியானது. இதையும் படியுங்கள்: மகாராஷ்டிரா ஆளுநருடன் தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு ஆனால், இன்று மாலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டது. தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தின் அடுத்த முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. இன்று இரவு 7.30 மணிக்கு ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பார் என பட்னாவிஸ் கூறினார். புதிய அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன், ஷிண்டேவின் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பேன் என்றும் பட்னாவிஸ் தெரிவித்தார்.