ரஷியா அச்சுறுத்தலால் ஐரோப்பியாவில் அமெரிக்க படை அதிகரிப்பு- ஜோபைடன் அறிவிப்பு..!!
30 நாடுகளை கொண்ட நேட்டோ அமைப்பின் மாநாடு ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தலாக திகழ்கிறது என்று பிரகடனப் படுத்தப்பட்டது. மேலும் உக்ரைன் மீது ரஷியா போரிட்டு வரும் சூழலில் உக்ரைனுக்கு அரசியல் ரீதியாகவும், செயல் ரீதியாகவும், அளித்து வரும் உதவிகள் அதிகரிக்க நேட்டோ நாடுகளின் தலைவர்கள் உறுதி அளித்தனர். இந்த நிலையில் ரஷியாவின் அச்சுறுத்தலையடுத்து ஐரோப்பியாவில் அமெரிக்க படை அதிகரிக்கப்படும் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்தார். நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க்கை ஜோபைடன் சந்தித்து பேசினார்.
நேட்டோ அமைப்பு வலுவானது மற்றும் ஒன்றுபட்டது. உச்சி மாநாட்டில் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் எங்களின் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்க போகிறோம். போலந்தில் நிரந்தர ராணுவ தலைமையகத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது. புதிய அமெரிக்க போர்கப்பல்கள் ஸ்பெயினுக்கும், போர் விமானங்கள் இங்கிலாந்துக்கும், தரைப் படைகள் ருமேனியாவுக்கும் அனுப்பப்படும். கிழக்கு பகுதி முழுவதும் அமெரிக்கா நேட்டோ அமைப்பினை வலுப்படுத்த உள்ளோம். பால்டிக் பிராந்தியத்திற்கு சுழற்சி முறையில் வீரர்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்
சீனாவுக்கு நேட்டோ மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சீனாவின் நேட்டோ மீதான எதிர்ப்பு மற்றும் ரஷியாவுடனான நெருக்கம் ஆகியவை பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. சீனாவின் செயல்பாடுகள் நேட்டோ கூட்டமைப்புக்கு எதிராக இருக்கிறது. நேட்டோ நாடுகள் பாதுகாப்புக்கும், மதிப்பீடுகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் முயற்சி செய்ததால் அந்நாடு மீது ரஷியா போரை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நேட்டோவில் உறுப்பினர்களாக சுவீடன், பின்லாந்து நாடுகள் இைணந்ததற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.