சதாப்தி ரெயிலில் ஒரு கப் டீ 70 ரூபாய்… சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஐஆர்சிடிசி பில்..!!
நாடு முழுவதும் ஓடும் தொலை தூர ரெயில்களில் பயணிகளுக்கு உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் சார்பில் இந்த உணவகங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. அவர்கள் மூலம் அமர்த்தப்படும் கேண்டீன் உரிமையாளர்களுக்கே, ரெயில்களில் உணவு சமைத்து விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ரெயில் பயணத்தின் போது ஒரு கப் டீ குடிப்பதற்கு ஒரு பயணி 70 ரூபாய் செலுத்திய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சதாப்தி ரெயிலில்தான் இந்த அளவுக்கு காஸ்ட்லியான டீ விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 28ம் தேதி டெல்லி-போபால் இடையே இயக்கப்படும் போபால் சதாப்தி ரெயிலில் பயணம் செய்த ஒரு பயணி, டீ வாங்கி அருந்தி உள்ளார். டீ விலை 20 ரூபாய், சேவை வரி 50 ரூபாய் என மொத்தம் 70 ரூபாய்க்கு பில் கொடுத்துள்ளனர். அந்த தொகையை செலுத்திய பயணி, தனக்கு வழங்கப்பட்ட பில்லை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ’20 ரூபாய் மதிப்புள்ள தேநீருக்கு 50 ரூபாய் ஜிஎஸ்டி. மொத்தத்தில் ஒரு டீ விலை 70 ரூபாய். இது ஒரு அற்புதமான கொள்ளை அல்லவா?” என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பதிவு வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர். சிலர் அந்த பயணி வெளியிட்ட தகவலில் ஜிஎஸ்டி என்ற தகவல் தவறு என்றும், அது சேவை வரி என்றும் திருத்தினர். எனினும், ஒரு கப் டீக்கு 50 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் என்பது அதிகம் என்று பலர் பதிவிட்டனர். ஆனால் அதிக கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு கப் டீக்கு 70 ரூபாய் வசூலித்ததற்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- வாடிக்கையாளரிடமிருந்து கூடுதல் பணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. இந்திய ரெயில்வேயால் 2018இல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ராஜ்தானி அல்லது சதாப்தி போன்ற ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள், முன்கூட்டியே உணவை முன்பதிவு செய்யாமல், பயணத்தின்போது டீ, காபி அல்லது உணவை ஆர்டர் செய்து வாங்கினால் ஒவ்வொரு உணவுக்கும் ரூ.50 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஒரு கப் டீயாக இருந்தாலும் சரி. இதற்கு முன்பு ராஜ்தானி அல்லது சதாப்தி போன்ற ரெயில்களில் உணவு சேவை கட்டாயமாக இருந்தது, ஆனால் பின்னர் அது விருப்ப தேர்வாக மாற்றப்பட்டது. அதாவது, பயணிகள் விரும்பினால், அந்த ரெயில்களில் உணவு மற்றும் குளிர்பானங்களை வாங்க மறுக்கலாம். டிக்கெட்டுக்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும், உணவு சேவைக்கு வழங்கவேண்டியதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.