அ.தி.மு.கவை கைப்பற்றுவதற்கு சின்னம்மா முயற்சி..!!
அண்ணா திராவிட முன்னேற்ற கழக்கத்தில் (அ.தி.மு.க) ஒற்றைத் தலைமை கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இருவரும் நீதிமன்றங்களிலும், தேர்தல் ஆணையத்திலும் மாறி மாறி மனுக்களை கையளித்து வருகின்றனர்.
இதனிடையே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அரசியல் சுற்றுப்பயணத்தை கடந்த 26ஆம் திகதியன்று ஆரம்பித்தார். திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனத்தை ஆரம்பித்து, ஆர்.கே.பேட்டையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது, ‘அ.தி.மு.க.வை காக்கவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. என் தலைமையில் அ.தி.மு.க., இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் ஆசைப்படுகின்றனர்’ என தெரிவித்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டும் என சசிகலாவுக்கு அழைப்பு விடுத்து அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ராயப்பேட்டை மற்றும் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை சுற்றிலும் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சசிகலா ஒருவேளை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துக்கு செல்லதிட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வியும் கட்சியினரிடம் எழுந்துள்ளது. இதையடுத்து, பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.