இலங்கையின் பொதுக்கடன்கள் நிலைபேறானதன்மை வாய்ந்தவையாக இல்லை – சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு!!
இலங்கைக்கான விஜயத்தின்போது இங்குள்ள மக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளை அவதானிக்க முடிந்ததாகவும், குறிப்பாக இந்த நெருக்கடியினால் வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு, தற்போதைய கடினமான சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக உதவிகளை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
அதேவேளை வெகுவிரைவில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர்மட்ட இணக்கப்பாட்டை எட்டுவதை முன்னிறுத்திய கலந்துரையாடல்கள் நிகழ்நிலையில் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கும் அக்குழு, இலங்கையின் பொதுக்கடன்கள் நிலைபேறானதன்மையற்றவையாக மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெறுவதற்கு கடன்களின் நிலைபேறானதன்மையை மீளுறுதிப்படுத்தமுடியும் என்ற நிதியியல் உத்தரவாதத்தை இலங்கையின் கடன்வழங்குனர்கள் வழங்கவேண்டியது அவசியமாகும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியின் கீழான பொருளாதார செயற்திட்டம் தொடர்பில் பீற்றர் ப்ரூயெர் மற்றும் மஸாஹிரோ நொஸாகி ஆகியோர் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவினால் கடந்த மேமாதம் 9 – 24 ஆம் திகதிவரை இலங்கை அதிகாரிகளுடன் நிகழ்நிலையில் முன்னெடுக்கப்பட்டுவந்த கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அக்குழுவின் மதிப்பீட்டு அறிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்குரிய செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக வெகுவிரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவை நாட்டிற்கு அனுப்பிவைக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கைவிடுத்திருந்தார்.
அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவது குறித்துக் கலந்துரையாடுவதற்காக பீற்றர் ப்ரீயர் மற்றும் மஸாஹிரோ நொஸாகி ஆகியோர் தலைமையிலான சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்ததுடன், நேற்றைய தினம் வரையில் நாட்டில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் அவசியமான கலந்துரையாடல்களை முன்னெடுத்தனர். அதன்படி தமது விஜயத்தின் நிறைவில் அவ்வதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது. இவ்வாண்டில் இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவினால் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்டாலும் பணவீக்கம் தொடர்ந்து மிக உயர்வான மட்டத்தில் அதிகரித்துச்செல்கின்றது. மிகவும் குறைந்தளவிலான வெளிநாட்டுக்கையிருப்பு அத்தியாவசியப்பொருட்களை இறக்குமதி செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கான எமது விஜயத்தின்போது அங்குள்ள மக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளை அவதானிக்க முடிந்ததுடன், குறிப்பாக இந்த நெருக்கடியினால் வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறானதொரு கடினமான சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக உதவிகளை வழங்குவதற்கு நாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை மீளவலியுறுத்துகின்றோம்.
அரசாங்கத்தினால் கடந்த ஏப்ரல்மாதத் தொடக்கத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட நாணய மற்றும் நிதிக்கொள்கை மாற்றங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் இப்பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்கான முதற்படியாகும். எமது விஜயத்தின்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி அளித்தல் செயற்திட்டத்துடன் ஒன்றிணைந்த பொருளாதாரக்கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்புக்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் செயற்திறனான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.
நுண்பாக மற்றும் கட்டமைப்பு ரீதியான கொள்கைச்செயற்திட்டத்தை வரையறுப்பதில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளும் இலங்கை அதிகாரிகளும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பித்தனர். அதன்படி வெகுவிரைவில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர்மட்ட இணக்கப்பாட்டை எட்டுவதை முன்னிறுத்திய கலந்துரையாடல்கள் நிகழ்நிலையில் முன்னெடுக்கப்படும். ஏனெனில் இலங்கையின் பொதுக்கடன்கள் நிலைபேறானதன்மையற்றவையாக மதிப்பிடப்பட்டுள்ளன. எனவே சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதி பெறப்படுவதற்கு, கடன்களின் நிலைபேறானதன்மையை மீளுறுதிப்படுத்தமுடியும் என்ற நிதியியல் உத்தரவாதத்தை இலங்கையின் கடன்வழங்குனர்கள் வழங்கவேண்டியது அவசியமாகும்.
இலங்கைக்கான எமது விஜயத்தின்போது இடம்பெற்ற கலந்துரையாடல்கள் நுண்பாகப்பொருளாதார சமநிலையின்மையை சீரமைத்தல், பொதுக்கடன்களின் நிலைபேறானதன்மையை உறுதிப்படுத்தல், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இயலுமையை இனங்காணல் என்பவற்றை அடைந்துகொள்ளக்கூடியவாறான செயற்திறன்மிக்க பொருளாதார செயற்திட்டமொன்றைத் தயாரிப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது.
அதன்படி அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல், தீவிரமடைந்துள்ள வெளிநாட்டுக்கையிருப்புப் பற்றாக்குறையை உரியவாறு கையாள்தல், ஊழல்மோசடிகளைக் குறைத்தல், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும். பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டத்தை உருவாக்குவதில் இலங்கை அதிகாரிகள் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றத்தைக் காண்பித்திருக்கும் நிலையில், அவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”