பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் சர்வதேச நாணய நிதியத்தாலும் இலங்கைக்கு உதவ முடியாது – ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை!!
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்டினாலும் , கடன் வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.
இலங்கைக்கு உதவ முடியாதவாறு சர்வதேச நாணய நிதியத்தின் கைகளும் கட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் வரை நாட்டின் தற்போதைய தேவைகளை நிறைவு செய்வதற்காக குறுகிய கால வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
அடுத்த 4 மாதங்களுக்கு 4 பில்லியன் டொலர் தேவைப்பாடு காணப்படுகிறது. அத்தோடு சர்வதேச நாணய நிதியம் , உலக வங்கி, பிணைமுறி கடன்கள் உள்ளிட்டவற்றை செலுத்தாமலிருக்க முடியாது.
இதற்கு வெளிநாடுகளிடம் கடன் கோர முடியாது. எனவே நட்பு நாடுகளிடமே உதவி கோர வேண்டும். இந்த உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஆழமான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது அத்தியாவசியமானதாகும்.
அதற்கமைய வரி, செலவு, நிவாரணம், அரச நிதி, அரச நிறுவனங்கள், அரச சேவை, ஓய்வூதியம் உள்ளிட்ட கொள்கைகளில் ஆழமான மறுசீரமைப்புக்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறன்றி இந்த நெருக்கடிகளிலிருந்து மீள முடியாது.
இதற்கு முன்னர் 16 சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கின்றோம். அந்த சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்துடன் மாத்திரமே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுடோம். ஆனால் இம்முறை மூன்றாம் தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
எமக்கு கடன் வழங்கியுள்ளவர்களே அந்த மூன்றாம் தரப்பினராவர். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இவர்களிடம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இரு நிறுவனங்களின் அதிகாரிகள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது பொருளாதாரம் குறித்த தரவுகளை மதிப்பாய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டிய தரவுகளைக் கூட முழுமையாக பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.
இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த பாராளுமன்ற அமர்வில் வெளிப்படுத்தியிருந்தார். இந்த மதிப்பாய்வுகள் நிறைவடைந்த பின்னரே குறித்த நிறுவனங்கள் கடன் வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும்.
எனவே சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டினை எட்டினாலும் , கடன் வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் , கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.
அரசாங்கம் ஆழமான பொருளாதார மறுசீரமைப்புக்கள் தொடர்பில் பின்பற்றவுள்ள கொள்கைகளின் அடிப்படையிலேயே கடன் வழங்குனர்களின் தீர்மானம் அமைந்துள்ளது. ஆழமான பொருளாதார மறுசீரமைப்புக்களை இந்த அரசாங்கத்தினால் தனித்து மேற்கொள்ள முடியாது. எனவே தான் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.
கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகாமல் இருக்கின்ற ஒவ்வொரு நிமிடமும் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் அதிகரிக்கவே செய்யும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்பட்ட போதே நாட்டை கட்டியெழுப்ப முடியாமல் போன இந்த அரசாங்கத்திற்கு, தற்போது எவ்வாறு அதனை செய்ய முடியும் ? இப்போது சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கை அல்ல. அது அத்தியாவசிய தேவையாகியுள்ளது. இதற்கு வழிவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ உடன் பதவி விலக வேண்டும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”