;
Athirady Tamil News

அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகம் தொடர்பாக பந்துல குணவர்தன அவர்களுக்கு அங்கஜன் கடிதம்!!

0

யாழ் – கொழும்புக்கிடையிலான அத்தியாவசிய உணவு, மருந்துபொருள் விநியோகத்துக்காக புகையிரத சேவையை பயன்படுத்த உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தன அவர்களிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை.

யாழ் – கொழும்புக்கிடையிலான அத்தியாவசிய உணவு, மருந்துபொருள் விநியோகத்துக்காக தற்போதைய நிலையில் மாற்று வழிகளை ஏற்பாடு செய்து தருமாறு யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தன அவர்களிடம் அங்கஜன் இராமநாதன் கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

அமைச்சருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில்,
யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் இதுவரைகாலமும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக ஏராளமான லொறிகளை பயன்படுத்தினர்.

துரதிஷ்டவசமாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் கீழ் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதால் யாழ்.மாவட்ட வர்த்தகர்கள் லொறிகளை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
தற்போதைய நெருக்கடி நிலையானது மேலும் மோசமடைந்து, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்களுக்கு போக்குவரத்துக்காக சுமார் பத்து அல்லது பன்னிரெண்டு புகையிரத வண்டிகள் தேவைப்படுவதால் அதற்கான செலவை அவர்கள் செலுத்த தயாராக உள்ளனர்.

எனவே இப்பிரச்சினையின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியப் பொருட்களை புகையிரதம் மூலம் சலுகை விலையில் கொண்டு செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.