யாழ் மாவட்ட விவசாய அறுவடைக்கு 1,655,202.84 லீற்றர் மண்ணெண்ணை தேவை!! (படங்கள்)
யாழ் மாவட்ட விவசாய அறுவடைக்கு 1,655,202.84 லீற்றர் மண்ணெண்ணை தேவை : இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களிடம் அங்கஜன் இராமநாதன் விசேட கோரிக்கை.
யாழ் மாவட்டத்தில் சிறுபோக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அறுவடையை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள நிலையில், நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்கான 1,655,202.84 லீற்றர் மண்ணெண்ணெய் அவசரமாகத் தேவைப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில் மாவட்ட விவசாயிகள் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்து வரும்நிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களிடம் அங்கஜன் இராமநாதன் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
அத்துடன் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கௌரவ காஞ்சன விஜேசேகர, விவசாய அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர ஆகியோரின் கவனத்திற்கும் இவ்விடயத்தை அங்கஜன் இராமநாதன் எடுத்துச் சென்றுள்ளார்.
குறிப்பாக, இந்தியாவில் இருந்து 300,000 பரல்கள் மண்ணெண்ணெய் இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அவற்றை யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் (28.06.2022, 30.06.2022 தினங்களில்) அனுப்பி வைத்த கடிதங்களில்,
ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் இல்லாத நிலையில் யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தியே விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். எனவே பயிர்களுக்கான நீர்ப்பாசன செயற்பாடுகளுக்காக யாழ்ப்பாணத்தில் 49% விவசாயிகள் இன்னமும் எரிபொருளுக்காக காத்திருக்கின்றனர்.
யாழ் மாவட்ட சிறுபோக அறுவடைக்கு 1,655,202.84 லீற்றர் மண்ணெண்ணெய் மற்றும் 84,728.46 லீற்றர் டீசல் உடனடியாக தேவைப்படும்நிலையில் விவசாயிகளின் நலன்கருதி அவற்றை உடனடியாக வழங்க ஏற்பாடுகளை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை இவ்விடயம் தொர்பாக விவசாய அமைச்சின் செயலாளருக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்கள் கோரிக்கை கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”