ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.44 லட்சம் கோடி..!!
ஜி.எஸ்.டி வரி வருவாய் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 616 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், வசூல் 1.40 லட்சம் கோடியை தாண்டுவது இது 5வது முறையாகும். கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் தொடர்ந்து 4வது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. மொத்த வருவாயில் மத்திய ஜிஎஸ்டி ரூ.23,306 கோடியும், மாநில ஜிஎஸ்டி ரூ.32,406 கோடியும், ஒன்றிணைந்த ஜிஎஸ்டி ரூ.75,887 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.40,102 கோடி உட்பட), செஸ் ரூ.11,018 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.1,197 கோடி உட்பட) அடங்கும். ஜூன் மாத வசூலானது கடந்த ஏப்ரல் மாதம் வசூலான 1,67,540 கோடிக்கு அடுத்து மிகப்பெரிய தொகையாகும். கடந்த மே மாதம் ரூ.1.41 லட்சம் கோடி வசூலாகியிருந்தது. பொருளாதார வளர்ச்சி மற்றும் போலி பில் தயாரித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை காரணமாக ஜிஎஸ்டி வசூல் உயர்ந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.