மணிப்பூர் மாநிலத்தில் இன்றும் நிலச்சரிவு- அசாம் மாநிலத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு..!!
மணிப்பூர் மாநிலத்தின் நானி மாவட்டத்தில் ரயில்வே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இன்று அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 தொழிலாளர்களை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த புதன்கிழமை இரவு துப்புல் யார்டு ரயில்வே கட்டுமான முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது, மேலும் காணாமல் போன 38 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்றன. நான்கு பேரின் உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஒப்பந்த பணிகளில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் ரயில்வே கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தைச் சேர்ந்த 22 பேர்களின் பெயர்களை அசாம் அரசு வெளியிட்டது. இவர்களில், ஐந்து பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர், ஐந்து பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. மேலும் 12 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.