வெளிநாட்டு விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் செயற்பாடு நிறுத்தம்!!
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை வரும் வெளிநாட்டு விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.
விமானங்களுக்கான எரிபொருள் நிறைவடைந்துள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவண்சந்ர குறிப்பிட்டார்.
இதன் காரணமாக முழுமையான எரிபொருளுடன் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு விமானங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர தேவைக்காக மிகவும் குறைந்த அளவான விமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
விமானங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இலங்கை கனியவள கூட்டுத்தாபனம், துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் என்பவற்றின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.
எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் தேவையான விமான எரிபொருளை பெற்று தருவதற்கு கனியவள கூட்டுதாபனம் இதன்போது இணங்கியதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவண்சந்ர தெரிவித்தார்.
எனினும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கைக்கான விமான சேவைகளை குறைப்பதற்கு சில விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் குறிப்பிடுகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”