இடம் மாற்றத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது !!
2023 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பொதுச் சேவை உத்தியோகஸ்தர்களின் வருடாந்த இடமாற்றத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ஏ. மன்சுர் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்று காரணமாக 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.
புதிய இடமாற்றங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் செயற்படும். அதற்கேற்ற வகையில் இடமாற்ற உத்தியோகஸ்தர்கள் விடுவிப்புச் செய்யப்பட வேண்டுமென திணைக்களங்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விபரங்கள் அடங்கிய சுற்றுநிரூபம் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், நிறுவனத் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிள் ஒரு நிலையத்தில் தொடர்ச்சியாக பல வருடங்களாக சேவையாற்றிவருகின்ற அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை, அபிவிருத்தி உத்தியோகஸ்தர், மொழி பெயர்ப்பாளர் சேவை, சாரதிகள் சேவை, அலுவலகப் பணியாளர் சேவை, தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் சேவை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர் சேவை என்பவற்றைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களே இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.
திணைக்களங்களில் காணப்படும் அனுமதிக்கப்பட்ட ஆளணியினருக்கு மேலதிகமாக ஆளணியினர் கவனத்தில் கொள்ளப்பட்டு, இடமாற்றத்திற்கு உள்ளாக்கப்படுவர். எனினும் இவர்களுக்கான பதிலீடுகள் வழங்கப்படமாட்டாது எனவும் அச் சுற்று நிரூபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்களின் தலைவர், செயலாளர்,பொருளாளர் மற்றும் மத்திய குழு உறுப்பினர்களை இடமாற்றம் செய்வதாயின், தொழிற்சங்க செயலாளரின் சிபாரிசு கவனத்தில் கொள்ளப்படும். இது தொடர்பான விபரங்களையும் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் ஜுலை 31 ஆம் திகதிக்கு முன்னர் பிரதிப் பிரதம செயலாளர்(நிர்வாகம்), பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம், கன்னியா வீதி வரோதய நகர், திருகோணமலை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
இடமாற்றத் தீர்மானங்களை அமைச்சு, திணைக்களங்களுக்கு அறிவிக்கப்படவுள்ளதோடு, நவம்பர் 05 ஆம் திகதி இடமாற்ற மேன்முறையீடுகள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதுடன், டிசம்பர் 01 ஆம் திகதி மேன் முறையீடுகள் தொடர்பான இறுதித் தீர்மானங்கள் அறிவிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி காலப்பகுதிக்குள் உள்ளக இடமாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.