தனியார் பஸ் சேவை முடங்கும் அபாயம் !!
நாடு முழுவதும் இன்றையதினம் (03) 1,000 தனியார் பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவித்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, நாளை (04) 1,000க்கும் குறைவான பஸ்களே நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபடும் என்றும் எச்சரித்துள்ளார்.
மக்கள் தமது வாகனத்தை விட்டுவிட்டு பஸ் போக்குவரத்துக்கு மாறியுள்ளனர் என்றும்
ஓட்டோ தொழில் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் தெரிவித்த அவர், அதேசமயம் நோயாளிகளும் மருத்துவ சிகிச்சை பெறுவதில் சிரமப்படுகின்றனர் என்றார்
டீசல் கையிருப்பு தீர்ந்து வருவதால், இந்த நேரத்தில் பஸ்களை இயக்குவதற்கு போதுமான அளவு டீசலை விநியோகிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தவறிவிட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.
பொது போக்குவரத்து சேவையை தொடர்ந்து கொண்டு செல்லும் நோக்கில் தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் எரிபொருளை வழங்குமாறு அரசாங்கம் இதற்கு முன்னர் அறிவுறுத்தியது.
எனினும் இலங்கை போக்குவரத்து சபையின் சில பிரதேச டிப்போக்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் வழங்கப்படுவதோடு சில இடங்களில் எரிபொருள் வழங்க மறுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.