தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு மக்கள் வழி வகுத்து வருகின்றனர்- பிரதமர் மோடி நம்பிக்கை..!!
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு 2 நாள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, பின்னர் ஐதராபாத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக அரசு புதுமையான மற்றும் தொழில்நுட்ப திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், ஏழை சகோதர சகோதரிகளுக்கும் நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தெலுங்கானா விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த 8 ஆண்டுகளில் தெலுங்கானா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் நீளம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வதில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளதாக சமீபத்தில் ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. கிராமப்புறங்களில் இது இன்னும் சிறப்பாக உள்ளது. மத்திய அரசு அவர்களை வங்கி அமைப்பில் இணைத்ததால் இது சாத்தியமானது. கடந்த 8 ஆண்டுகளில், ஏழை, தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நாங்கள் தொடங்கினோம். அதனால்தான் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் எங்கள் அரசு மீதும் அதன் கொள்கைகள் மீது வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது. தெலுங்கானா மக்கள் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் திறமையானவர்கள். தெலுங்கானா வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்றது, அதன் கட்டிடக்கலை நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். மற்ற மாநிலங்களில், பா.ஜ.க.வின் இரட்டை எஞ்சின் அரசு மீது மக்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதை நாம் பார்த்தோம். தெலுங்கானாவில் கூட பாஜகவின் ஆட்சிக்கு மக்கள் வழி வகுத்து வருகின்றனர். தெலுங்கானாவில் பாஜகவின் இரட்டை எஞ்ஜின் ஆட்சி அமையும் போது, மாநிலத்தின் ஒவ்வொரு நகரங்களிலும் மற்றும் கிராமங்களிலும் வளர்ச்சிப் பணிகள் துரிதப்படுத்தப்படும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
முன்னதாக இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தெலுங்கானாவில் வளர்ச்சியும் இல்லை, வேலை வாய்ப்பும் இல்லை என்றார். நாடு முன்னேறி வரும் நிலையில், தெலுங்கானா மாநிலம பின்தங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். டிஆர்எஸ் அரசை வேரோடு மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்றும், டிஆர்எஸ் நிறைவேற்றாத அனைத்து வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றும் என்றும் அவர் உறுதியளித்தார். வேலையில்லாத இளைஞர்கள் மீது முதலமைச்சர் கே.சி.ஆருக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர் தனது மகனை முதல்வர் ஆக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்றும் அமித்ஷா குறிப்பிட்டார்.