வவுனியாவில் மூன்று விவசாயிகள் வனவளத்துறையினரால் கைது!விவசாய உபகரணங்கள் அபகரிப்பு!! (படங்கள்)
வவுனியா மடுக்குளம் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த மூன்று விவசாயிகள் வனவளத்துறையிரால் நேற்று 03-07-2022 கைது செய்யப்பட்டுள்ளதுனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா வேலன்குளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் 1982 ஆம் ஆண்டு தொடக்கம் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி ஒன்றிற்குள் எந்தவிதமான நீதிமன்ற கட்டளைகளும் இல்லாமல் அடாத்தாக புகுந்த வனவளத்துறையினர், அங்கு பயிரிடப்பட்டிருந்த நூறுக்கு மேற்பட்ட தென்னங்கன்றுகளை அகற்றியதுடன், ஒரு தண்ணீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் விவசாய உபகரணங்களை அபகரித்து சென்றுள்ளனர்.
இவ்நடவடிக்கையில் ஈடபட்டிருந்த வனவளத்துறையினர், குறித்த நிலப்பகுதியானது வனவளத்துறையினருக்கு சொந்தமானது என தெரிவித்தே குறித்த அடாவடித்தனத்தில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட விவசாயி கருத்து தெரிவித்திருந்தார்.
குறித்த காணியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் விவசாயியான சிவசுப்பிரமணியம் விஜியரூபன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
எங்களது பாட்டன் காலம் தொடக்கம் (1982) இந்தக் காணியில் விவசாய நடவடிக்கையில் நாங்கள் ஈடபட்டு வருகின்றோம் அரசாங்கத்தின் அனுமதி பெற்றே இப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். பிட்டித்தோட்டம் என அழைக்கப்பட்ட இக்காணியானது, வடக்கில் ஏற்பட்ட யுத்தசூழ்நிலை காரணமாக விவசாய நடவடிக்கைகள் முற்றாக கைவிடப்பட்டு நாங்கள் அகதியாக இடம்பெயர்ந்திருந்தோம். இந்நிலையில் இக்கிராமத்தில் இருந்த அனைவரும் தங்கள் உயிரை காப்பாற்றுமுகமாக இடம்பெயர்ந்து சென்றிருந்தனர்.
யுதடதம் முடிவடைந்ததன் பின்னர் 2011 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மடுக்குளம் கிராமத்திற்கு, அப்போதைய மாவட்ட அரசாங்க அதிபரால் தற்காலிக வீட்டுத்திட்டம் மற்றும் மலசலகூடம் என்பன வழங்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து இக்காணிக்கு 2014 ஆம் ஆண்டு வவுனியா பிரதேச செயலாளரினால் எல்.டி.ஓ என்ற காணி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காணிக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கை பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் எமது விவசாய நடவடிக்கையை வனவளத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் இதன் காரணமாக எமது பயிர்கள் அழிந்துபோகும் நிலையை எட்டியுள்ளது என கவலை வெளியிட்டார்.
இக்காணியில் 2014 ஆம் ஆண்டு பெரும் விவசாய கிறு ஒன்றை நிர்மாணித்ணத இக்கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முகமாக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் முகமாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தில் 01-07-2022 தொடக்கம் பதினைந்து நாட்களுக்குள் விவசாய காணிகள் விவசாயம் செய்யப்பட வேண்டும் அவ்வாறு செய்யப்படாதவிடத்து இராணுவம் அக்காணிகளை கைப்பற்றி விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் என கிராமங்கள் தோறும், கிராம உத்தியோகத்தர்களால் அறிவுறுத்தப்பட்டுவரும் நிலையில் வனவளத்துறையினர் அடாத்தாக நுளைந்து விவசாயத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மூவரை கைது செய்திருப்பதானது எமக்கு அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமது விடயத்தில் தலையிட்டு நீதியை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.